அரக்கோணம் அருகே ஒரே தெருவை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி 2 பெண்கள் பலி
பதிவு: ஜனவரி 26, 2021 17:22
இமையா- கோவிந்தம்மாள்
அரக்கோணம்
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம், பழைய பள்ளிக்கூடம் தெருவை சார்ந்த மேகவர்ணம் மகள் இமையா (வயது 14). அதே தெருவை சேர்ந்த பஞ்சாட்சரம் மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்கள், அங்குள்ள கல் ஆற்று பகுதியில் நேற்று முன்தினம் மதியம் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இமையா ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட கோவிந்தம்மாள், இமையாவை காப்பாற்ற ஆற்றில் இறங்கியபோது அவரும் நீரில் மூழ்கினார்.
இருவரும் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே, அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது.
ஒரே தெருவை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.