செய்திகள்
மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை கடைகள் 900 பேருக்கு குலுக்கலில் ஒதுக்கீடு

Published On 2021-01-20 09:23 GMT   |   Update On 2021-01-20 09:23 GMT
சென்னை மெரினா கடற்கரையில் கடை வைக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள், ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கத்தோடு ஐகோர்ட்டு அறிவுறுத்தியபடி வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் குலுக்கல் மூலம் சென்னை மாநகராட்சியின் மூலம் ஒதுக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் ஏற்கனவே வியாபாரம் செய்தவர்கள் மற்றும் புதிதாக கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கடைகள் ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு 60 சதவீதம் என்ற அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக கடை நடத்த விரும்புபவர்களுக்கு 40 சதவீதம் அடிப்படையில் 360 கடைகளும் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

‘அ’ வகையில் 1351 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு 1348 விண்ணப்பங்களும், ‘ஆ’ வகையில் 14,827 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து 12,974 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி ‘அம்மா’ அரங்கில் இன்று காலையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெற்றது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயரினை எழுதி போட்டு குலுக்கல் முறையில் கடைகளை தேர்வு செய்தனர். ஏற்கனவே மெரினாவில் கடை வைத்தவர்களுக்கு காலையில் குலுக்கல் நடந்தது. மாலையில் புதிதாக கடை வைக்க விண்ணப்பங்கள் கொடுத்தவர்களில் 360 பேருக்கு கடைகள் ஒதுக்கப்படுகின்றன.

தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள 900 பேருக்கும் மெரினாவில் எந்தெந்த இடங்களில் கடைகள் ஒதுக்குவது என்பதையும் குலுக்கல் முறையில் நாளை (21-ந்தேதி) தேர்வு நடக்கிறது.

Tags:    

Similar News