செய்திகள்
வகுப்பறையில் மாணவ - மாணவிகள்

பள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உள்ளது: மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி

Published On 2021-01-19 06:40 GMT   |   Update On 2021-01-19 06:40 GMT
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சக தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் சந்தித்தது ஒருவித உற்சாகத்தை கொடுக்கிறது என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
சென்னை:

கொரோனா பரவல் குறைய தொடங்கி இருப்பதை அடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 9 மாதங்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு சென்றனர். இதுநாள் வரையில் ஆன்லைன் வகுப்புகளால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மாணவர்களும், மாணவிகளும் கொரோனா பயமின்றி மிகுந்த உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு சென்றனர்.

மீண்டும் பள்ளிக்கு சென்றது பற்றி கருத்து தெரிவித்த மாணவ-மாணவிகள் இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு வந்திருப்பது சிறகடித்து பறப்பது போல் உள்ளது என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.

மாணவ-மாணவிகளின் மகிழ்ச்சி கலந்த பேட்டி வருமாறு:-

சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி கீர்த்தி:-

கடந்த 9 மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளால் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடந்தது போன்ற உணர்வே இருந்தது.

ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்ட போதிலும் அதனை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலையே இருந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இனி அந்த கவலை இல்லை.

எப்போதும் போல ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பாதுகாப்போடு பள்ளிக்கு வந்து படிப்பது தான் சிறந்தது. அப்போது தான் பாடங்களை எளிதாக புரிந்து படித்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

இத்தனை மாதங்கள் கழித்து பள்ளிக்கு சென்று தோழிகளையும், ஆசிரியர்-ஆசிரியைகளையும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

மாணவி ஜெனிபர்:-

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. உற்சாகமாக உணர்கிறேன். சக தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் சந்தித்தது ஒருவித உற்சாகத்தை கொடுக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள்தான் வீட்டிலேயே இருப்பது? தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது வரவேற்கக்கூடிய வி‌ஷயம் தான். பாதுகாப்புடன் பள்ளிக்கு சென்று படித்து விட்டு செல்ல வேண்டியது தான்.

செய்முறை தேர்வுகளை மீண்டும் செய்ய முடியும். நல்ல மதிப்பெண்களை பெற வேண்டுமானால் பள்ளிகளுக்கு சென்றுதான் படிக்க வேண்டும்.

10-ம் வகுப்பு படிக்கும் நான், எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று காத்திருந்தேன். 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தோழிகளை நேரில் பார்த்தது மகிழ்ச்சியான தருணமாக மாறி இருக்கிறது.

செய்முறை படிப்புகளை வீட்டில் இருந்தால் எப்படி செய்ய முடியும்? அதற்கு பள்ளிக்கு வந்துதானே ஆகவேண்டும்? பள்ளியில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டுள்ளனர். அதனால் கொரோனா வந்து விடுமோ என்கிற பயத்தை மாணவர்கள் தங்கள் மனதில் இருந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

ஹேமலதா (ராயபுரம் வள்ளல் எட்டியப்ப நாயக்கர் பள்ளி):

இதுநாள் வரையில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றதால், தோழிகளுடன் போனில் மட்டுமே பேச முடிந்தது. இப்போது தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இனி ஆசிரியர்களிடம் நேரில் கலந்துரையாட முடியும். படிப்பு தொடர்பான சந்தேகங்களை எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும். ஆன்லைனில் முழுமையாக கல்வியை பெற முடியாத நிலையே இருந்தது. அந்த நிலை இப்போது மாறி இருக்கிறது.

பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் இனி திட்டமிட்டு படிக்க முடியும். தேர்வுக்கு குறுகிய காலமே இருப்பதால், பிளஸ்-2வில் நல்ல மதிப்பெண்களை பெற பள்ளிகள் திறந்திருப்பது நிச்சயம் உதவிகரமாகவே இருக்கும்.

தட்சிணாமூர்த்தி (புனித சூசையப்பர் பள்ளி- செங்கல்பட்டு):

எங்கள் பள்ளியில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி உள்ளனர். ஒரு பெஞ்சில் 4 அல்லது 5 பேர் வரை இருப்போம். இப்போது 2 பேர்மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். வகுப்பறையில் இருக்கும்போது தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இருப்பது வரவேற்க கூடிய வி‌ஷயம்தான்.

தீபசுந்தரி:- (காஞ்சிபுரம் மாணவி)

ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் சரியாக புரியாமல் இருந்தது. பிளஸ்-2 படிக்கும் நான் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பது நல்ல வி‌ஷயம்தான். நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு இது நிச்சயம் உதவும். சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை அனைத்து மாணவர்களுமே பின்பற்ற வேண்டும். நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

லேகா (திருவள்ளூர்- மாணவி):

நான் இந்த வருடம் பிளஸ் 2 படிக்கிறேன். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் இந்த கல்வி ஆண்டில் இதுவரை திறக்கப்படவில்லை. வாழ்க்கையை நிர்ணயிக்கும் இந்த பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க நான் டியூ‌ஷன் சென்று படித்து வருகிறேன்.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டதோடு கல்வி தொலைக்காட்சி சேனல்களிலும் எனது பாடங்களை கவனித்து படித்து வருகிறேன்.

இந்நிலையில் கொரோனா தற்போது குறைந்து உள்ளதால் தமிழக அரசு இன்று முதல் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிக்கு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னதான் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு படித்தாலும் தொலைக்காட்சி சேனல்களில் வரும் பாடங்களை கவனித்தாலும் நேரில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனிப்பதில் உள்ள ஆர்வம் இதில் இல்லை என்றே சொல்லலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழிகளை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என எனது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படியே நானும் நடந்துகொள்வேன். நான் முதலில் வரும் பாடங்களை நன்றாக படித்து உள்ளேன். கடைசி பாடங்களை நீக்கி விட்டு முதலில் வரும் பாடங்களை நடத்தி தேர்வு எழுதச் சொன்னால் என்னைப் போன்ற பலருக்கும் இது உபயோகமாக இருக்கும். எனவே இந்த கல்வி ஆண்டில் என்னைப் போன்று பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து உயர்கல்வியில் பயில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர் மோகன்ராஜ் (திருவள்ளூர்):

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் நான் கிராமப்புறத்தில் இருப்பதால் எனக்கு சரிவர இணைய இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தேன். பாடங்கள் புரி யாவிட்டாலும் அதைக் கேட்பதற்குள் வகுப்புகள் முடிந்து விடுகின்றன.

இதனால் என்னுடைய சந்தேகங்களையும் கேட்க முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். இந்நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் சேர்ந்து பயில ஏதுவாக பாடத்திட்டங்களை குறைத்து இருப்பது மேலும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. என்னுடைய வகுப்பு தோழர்கள் அனைவரையும் இன்று நேரில் பார்த்ததில் சந்தோ‌ஷத்தின் உச்சத்தை அடைந்தேன்.

சுசீந்திரா (பொன்னேரி):-

கொரோனாவினால் பள்ளி 9 மாதங்களாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. இப்போது பள்ளி திறந்திருப்பது புதிய உலகுக்கு சென்றதுபோல் உள்ளது. சக தோழிகளையும், நண்பர்களையும் நேரடியாக பார்த்து பேச முடியாமல் தவித்தோம். ஆசிரியர்களை பார்த்து எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது. சக நண்பர்களை பார்ப்பது சந்தோ‌ஷமாக உள்ளது.

மாணவி பிரியங்கா (படப்பை அரசு பள்ளி):-

10 மாதங்களுக்குப் பின்பு எனது ஆசிரியர் மற்றும் தோழிகளை காண உள்ளேன் என்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் பள்ளி சென்று படிப்பது போல் இல்லை. இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத இருக்கும் நிலையில் நான் வீட்டிலிருந்து படிப்பது மிகவும் சிரமமாக உள்ளது வீட்டில் இருந்து படிக்கும்போது மற்ற என்னோடு சகோதரிகள் விளையாடும்போது என்னால் எப்படி படிக்க முடியும். ஆனால் பள்ளிக்குச்சென்று படிக்கும்போது கவனம் படிப்பில் மட்டுமே இருக்கும் விரைவில் பொதுத்தேர்வு வந்துவிடும் போலிருக்கிறது. அதற்கும் நாங்கள் தயாராக தான் உள்ளோம்.

பெற்றோர்கள் பள்ளியில் கவனமுடன் இருக்க சொல்லி அனுப்பி உள்ளனர். எங்களுக்கு முக கவசம் கட்டாயம் அணிந்தபடி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

நித்யஸ்ரீ (அம்பத்தூர்):-

கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே சிறைப்பட்டு கிடந்தோம். கொரோனா நோய் தொற்றின் காரணமாக நண்பர்கள் வீட்டிற்கும், உறவினர்கள் வீட்டிற்கும் கூட எங்கள் பெற்றோர் எங்களை அனுமதிக்கவில்லை. சிறையில் இருந்து விடுபட்ட பறவையைப் போல எங்கள் நண்பரை காணவும் பள்ளியில் மேற்படிப்பை எளிதில் புரியும் வகையில் படிக்கவும் இன்று பள்ளிக்கு வந்திருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

திவ்யா (அம்பத்தூர்):-

ஆன்லைன் வகுப்புகளால் எங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்து பெற்றோரும் ஆசிரியர்களும் படி படி என்று கூறிய காரணத்தால் வேறு வழியில்லாமல் நாங்களும் ஆன்லைன் வகுப்புகளை படித்து வந்தோம். ஆனால் இன்று முதல் நேரடியாக பாடங்களை படிப்பதால் எங்கள் கண்கள் மற்றும் உடல் நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு மாணவ- மாணவிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News