செய்திகள்
இறந்த அண்ணாமலை

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின் ஊழியர் பலி

Published On 2021-01-18 11:13 GMT   |   Update On 2021-01-18 11:13 GMT
கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் நீரில் மூழ்கிய மாணவியின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி இரவு நேரம் என்பதால் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கிறது.
கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏரியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி நைனார்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55). இவர் ஆத்தூர் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் நேற்று மாலை 3 மணி அளவில் வலசக்கல்பட்டி ஏரிக்கு குளிக்க சென்றார்.

அப்போது திடீரென அண்ணாமலை தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கெங்கவல்லி போலீஸ், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அண்ணாமலையை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இதனிடையே, கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் சாலை கூலமேடு ரோடு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது மகளான 6-ம் வகுப்பு மாணவி தேவி (11), தனது தாய்மாமன் செல்வராஜ், உறவினர்கள் சின்னப்பாப்பா, தீபா ஆகிய 3பேருடன் ஏரியை சுற்றிப்பார்க்க வந்தார்.

அப்போது தேவி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் மாணவி தேவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இரவில் வெளிச்சம் இல்லாததால் மாணவியை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இன்று (திங்கட்கிழமை) தேடும் பணி நடைபெறும் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால் மாணவியை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News