செய்திகள்
கோப்புபடம்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஒப்படைப்பு போராட்டம் - சம்மேளன செயலாளர் வாங்கிலி பேட்டி

Published On 2021-01-16 12:56 GMT   |   Update On 2021-01-16 12:56 GMT
தகுதியுடைய லாரிகளுக்கு சான்றிதழ் வழங்க மறுத்தால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஒப்படைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி கூறினார்.
நாமக்கல்:

நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி கூறியதாவது:-

லாரிகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி ஆகியவை பொருத்தப்பட வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதை கண்டித்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து போக்குவரத்து ஆணையர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை உள்பட 6 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற செல்லும் வாகனங்களின் உரிமையாளர்களை பல்வேறு காரணங்களை கூறி அழைக்கழித்து வருகின்றனர். எனவே தகுதியுடைய லாரிகளுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்க மறுத்தால், நாளை மறுநாள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு முன்பாகவே வாகனங்களை நிறுத்தி வாகன ஒப்படைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இவர்களின் செயல் லஞ்சத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News