செய்திகள்
வானிலை நிலவரம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்

Published On 2021-01-15 08:49 GMT   |   Update On 2021-01-15 08:49 GMT
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒருவாரமாக சூரியனை பார்க்க முடியாத வகையில் இரவு-பகல் பாராது விட்டுவிட்டு தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைப்பகுதியிலும் கனமழை கொட்டிதால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை வரையும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக கடலோர பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

16ம் தேதி தென்  தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17ம்தேதி தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 18ம் தேதி மற்றும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பதாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News