செய்திகள்
கொேரானா தடுப்பூசி ஒத்திகையில் 108 ஆம்புலன்சு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Published On 2021-01-09 12:43 GMT   |   Update On 2021-01-09 12:43 GMT
கரூர் மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
கரூர்:

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனாவை தடுக்கும் வகையிலான தடுப்பூசி விரைவில் வர உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நேற்று நடைபெற்றது. இந்த தடுப்பூசிகளை முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதில் சுகாதார பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள பணியாளர்களுக்கு செலுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஒருமாதமாக எடுக்கப்பட்டு அதன் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 அரசு மருத்துவமனை, 405 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என கரூர் மாவட்டத்தில் மொத்தம் 6,000 பணியாளர்களுக்கான தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு அரசு மருத்துவமனை, ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள 25 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்பது குறித்தும், தடுப்பூசி செலுத்தும் முன்பு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் குறுஞ்செய்தி வரும் விவரங்கள் குறித்தும் ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி கஸ்தூரிபாய் மருத்துவமனை, கரூர் அப்பல்லோ மருத்துவமனையிலும் நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது.

இதில் டாக்டர்கள், நர்சுகளுக்கு தடுப்பூசி போடுவது எப்படி? அதன்பின் அவர்களை அரை மணி நேரம் கண்காணிப்பது? உள்பட தடுப்பூசி போடுவதற்கான இடங்கள், கட்டமைப்புகள் ஆகியவை தொடர்பாக ஒத்திகை நடைபெற்றது.

Tags:    

Similar News