செய்திகள்
கரூர் சுங்ககேட் பஸ் நிறுத்தம் பகுதியில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.

கரூரில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை- சாலைகளில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி

Published On 2021-01-01 09:56 GMT   |   Update On 2021-01-01 09:56 GMT
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கரூர்:

கரூரில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் குடைப்பிடித்தும், நனைந்து கொண்டும் சென்றதை காண முடிந்தது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் இந்த மழையால் அவதியடைந்தனர். கரூர், திருமாநிலையூர், காந்திகிராமம், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இந்த மழை சுமார் மதியம் 3 மணி வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுங்ககேட் பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதிகளில் உள்ள குகைவழிப்பாதைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

குளித்தலையில் பகுதியில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் காலையில் வேலைக்கு சென்றவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த மழையால் குளித்தலை நூலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் குடையை பிடித்தவாறு வியாபாரம் செய்தனர். பொதுமக்களுக்கும் குடைகளை பிடித்து கொண்டு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

கிருஷ்ணராயபுரம், சித்தலவாய், மாயனூர், மணவாசி, சேங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை 5 மணி முதல் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழை மதியம் ஒரு மணி வரை நீடித்தது. இந்த மழையால் தனியார் மற்றும் அரசு வேலைகளுக்கு சென்றவர்கள் சிறிது சிரமம் அடைந்தனர். மாயனூரில் 4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நொய்யல், குறுக்குச்சாலை, மரவாபாளையம், புங்கோடை, குளத்துப்பாளையம், வடுகப்பட்டி, வேட்டமங்கலம், நத்தமேடு, குந்தானி பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப் பாளையம், நல்லிக்கோவில், புன்னம் சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், பழமாபுரம், குட்டக்கடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக காலையில் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் சாலையோரங்களில் காய்கறி, தள்ளுக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். விவசாய வேலைகளும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், காகிதபுரம், செக்குமேடு, மூலிமங்கலம், புகளூர், கூலக்கவுண்டனூர், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், புஞ்சை கடம்பங்குறிச்சி, பெரியவரப்பாளையம்,, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை பிற்பகல் வரை தொடர்ந்து சாரல் மழையாக பெய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News