செய்திகள்
கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுதை சரி செய்யும் பணி தீவிரம்

Published On 2020-12-30 07:17 GMT   |   Update On 2020-12-30 07:17 GMT
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 9-ந் தேதி 2-வது அணுஉலை டர்பைனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று மீண்டும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 2-வது அணுஉலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினர்.

தற்போது முதலாவது அணு உலையில் இருந்து 1, 000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News