செய்திகள்
விபத்து

ஆலங்குளம் அருகே இன்று விபத்து- டயரில் சிக்கி டிரைவர் பலி

Published On 2020-12-30 06:17 GMT   |   Update On 2020-12-30 06:17 GMT
ஆலங்குளம் அருகே இன்று நின்ற லாரி மீது கண்டெய்னர் மோதிய விபத்தில் டயரில் சிக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் அருகே உள்ள மடவார் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன்கள் திருநாவுக்கரசு(வயது 42), சுப்புராஜ்(37). இவர்கள் இருவரும் லாரி டிரைவர்களாக உள்ளனர்.

நேற்று மாலை 2 பேரும் தூத்துக்குடியில் இருந்து லாரியில் மரத்தடிகள் ஏற்றிக் கொண்டு செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை திருநாவுக்கரசு ஓட்டி வந்தார்.

நள்ளிரவில் பேட்டைக்கு வந்தபோது திருநாவுக்கரசு தனக்கு தூக்கம் வருவதாக கூறி உள்ளார். உடனே லாரியை சுப்புராஜ் ஓட்ட ஆரம்பித்தார்.

அதிகாலையில் லாரி சீதபற்பநல்லூர் அருகே சென்ற போது டயர் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு டயருக்கு அடியில் சென்று சுப்புராஜ் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது செங்கோட்டைக்கு வந்த கண்டெய்னர் ஒன்று லாரி மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதனால் நின்று கொண்டிருந்த லாரி முன்புறமாக நகர்ந்தது. அப்போது லாரியின் டயருக்கு அடியில் உட்காந்திருந்த சுப்புராஜ் மீது லாரி ஏறியது.

இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த மரத்தடி கேபினில் மோதியதால் கேபின் அப்பளமாக நொறுங்கியது. இதில் லாரியில் தூங்கி கொண்டிருந்த திருநாவுக்கரசு சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.

மோதிய கண்டெய்னர் டிரைவரான ஆலங்குளம் அருகே உள்ள அகரத்தை சேர்ந்த சுந்தரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தில் சிக்கி பலியான சுப்புராஜின் உடலை இன்று காலை 7 மணிக்கு பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News