செய்திகள்
கோப்புப்படம்

103 கிலோ தங்கம் மாயமான வழக்கு- வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார்

Published On 2020-12-29 01:53 GMT   |   Update On 2020-12-29 01:53 GMT
சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினார்கள்.
சென்னை:

சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சத்தியசீலன் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிவிட்டனர்.

லாக்கரில் வைக்கப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு ராமசுப்பிரமணியன் என்ற பொறுப்பு அதிகாரியை நியமித்தது. அவர்தான் தங்கம் காணாமல் போனதை கண்டு பிடித்தார். தற்போது அவர் கொடுத்த புகார் அடிப்படையில்தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று அவரை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து சூப்பிரண்டு விஜயகுமார் நேரடியாக விசாரித்தார். அப்போது சில வீடியோ ஆதாரங்களை அதிகாரி ராமசுப்பிரமணியன் ஒப்படைத்ததாக தெரியவந்துள்ளது. இனி தொடர்ந்து விசாரணை நடக்கும் என்றும், யார், யாரை விசாரிப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்படி விசாரணை நடைபெறும் என்றும் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News