செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் - 164 பேர் கைது

Published On 2020-12-15 14:30 GMT   |   Update On 2020-12-15 14:30 GMT
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 164 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நல்லையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி அழகுமுத்துப்பாண்டியன், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், விவசாய சங்க மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் சந்தனசேகர், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மீனவர் அணி நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னரசு, இளங்கோவன், கணேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊரடங்கு அமலில் இருப்பதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

இதைதொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள அணுகுசாலையில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏர் கலப்பையுடன் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது சிலர் அருகில் இருந்த கால்வாய் உள்ளே தண்ணீரில் இறங்கி நின்று கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் பங்கேற்ற 85 வயதான எட்டயபுரம் பிதப்புரத்தை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி ராமசுப்பு திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக போலீசார் அவரை, மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சிலரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 164 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News