செய்திகள்
புதிய வாக்காளர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரசாரம்

மன்னார்குடியில் ரங்கோலி வரைந்து புதிய வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2020-12-12 10:18 GMT   |   Update On 2020-12-12 10:18 GMT
மன்னார்குடியில் ரங்கோலி வரைந்து புதிய வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் உறுதி மொழி எடுத்தனர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், மன்னார்குடி வட்டத்தின் சார்பில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மன்னார்குடி வ.உ.சி.சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊரக வாழ்வாதார இயக்க வட்ட மேலாளர் மாலா தலைமை தாங்கினார். 2021-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த திட்ட முகாமில் 18 வயது நிரம்பியவர்கள், புதிய வாக்காளராக சேரலாம் என்பதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ரங்கோலி வண்ண கோலம் போடப்பட்டது. இதில் விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றிருந்தது.

பின்னர் இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதேபோல் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சியிலும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இதில் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகபிரியா, நர்மதா, குமுதம், பிரவிணா, சுதா, விஜயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடி ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி தொடங்கி வைத்தார். ஊர்வலத்திற்கு தாசில்தார் தெய்வநாயகி முன்னிலை வகித்தார்.

இதில் தேர்தல் துணை தாசில்தார் இளங்கோவன், நகராட்சி சமுதாய அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விரிவாக பதிவு செய்து கொள்ள வேண்டும். திருத்தங்கள் ஏதேனும் இருப்பினும் உடனடியாக செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
Tags:    

Similar News