செய்திகள்
டாக்டர்கள் ஸ்டிரைக்

குமரி மாவட்டத்தில் 600 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்

Published On 2020-12-11 13:39 GMT   |   Update On 2020-12-11 13:39 GMT
ஆயுர்வேத டாக்டர்கள் மனித உடலை அறுவை சிகிச்சை செய்ய வழி வகுக்கும் ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 600 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:

ஆயுர்வேத டாக்டர்கள் மனித உடலை அறுவை சிகிச்சை செய்ய வழி வகுக்கும் ஆணையை திரும்பப்பெற வேண்டும், அதனை முறைப்படுத்தும் 4 குழுமங்களை கலைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் டாக்டர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்ட மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டிருந்தது.

நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படவில்லை. ஆஸ்பத்திரி வாசலில் இன்று மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்கப்படாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவசர அறுவை சிகிச்சை மட்டும் நடந்தது.

மார்த்தாண்டம், தக்கலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 600 தனியார் ஆஸ்பத்திரிகளும் மூடப்பட்டிருந்தது. 1,450 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அகில இந்திய மருத்துவ சங்க டாக்டர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி உள்படஅரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் வழக்கம்போல் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், டாக்டர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த போராட்டங்கள் நடக்கிறது. அரசு இதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
Tags:    

Similar News