செய்திகள்
விபத்து

தடிக்காரன்கோணம் அருகே விபத்து- டிப்ளமோ என்ஜினீயர் பலி

Published On 2020-12-08 14:11 GMT   |   Update On 2020-12-08 14:11 GMT
தடிக்காரன்கோணம் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில், டிப்ளமோ என்ஜினீயர் பலியானார்.
பூதப்பாண்டி:

அருமநல்லூரை அடுத்த புளியடி பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி கோல்டா. இவர்களுக்கு விவேக், சினு (வயது 19) ஆகிய 2 மகன்கள். சினு எலெக்ட்ரிகல்ஸ் அன்ட் எலெக்ட்ரானிக் டிப்ளமோ படித்துள்ளார்.

இவர் நேற்று மதியம் 1 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். தோமையார்புரம் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே செல்லும் போது, வடக்கன் குளம் பகுதியில் இருந்து பாறைளை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி-ஸ்கூட்டர் மோதிக்கொண்டன. இதில் சினு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அங்கு அப்பகுதி மக்கள் திரண்டனர். பூதப்பாண்டி போலீசாரும் விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு லாரியை சிறைபிடித்தும், சினு உடலை போலீசார் எடுக்க விடாமல் சாலையில் அமர்ந்தும், மோட்டார் சைக்கிளை நிறுத்தி தடுப்பு ஏற்படுத்தியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்த பின்பும் சாலையை சீரமைக்காமல் இருப்பதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறினார்கள். இதற்கு இறுதி முடிவு எட்டாமல் சினு உடலை எடுக்க விடமாட்டோம் எனகூறி மறியல் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சில்வான்ஸ், ஜானகி ஆகியோர் விரைந்து வந்தனர். தோவாளை தாலுகா தாசில்தார் ஜீலியன் ஹீலர் மற்றும் வருவாய் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் அருமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பால் மணி, தோவாளை யூனியன் கவுன்சிலர் ஏசுதாஸ், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த செல்லப்பன், தி.மு.க. நிர்வாகி கேட்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது துவரங்காடு பகுதியில் ஒரு சோதனை சாவடி அமைத்து இரவு, பகல் போலீசார் வாகன சோதனை நடத்தி, அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு சாலை விபத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்குள் சாலையை சீரமைக்கும் பணி மேற்கொள்வது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதை பொது மக்கள் ஏற்று கொண்டனர். அதைத்தொடர்ந்து சினு உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர் அருமனையை அடுத்த பனிச்ச விளை பகுதியைச் சேர்ந்த லெனினை (53) கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அந்தப் பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News