செய்திகள்
கொள்ளை

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரருக்கு தர்ம அடி

Published On 2020-12-04 14:19 GMT   |   Update On 2020-12-04 14:19 GMT
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்றாகும். இங்குள்ள பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பஸ் நிலையத்தில் நரிக்குறவர்கள் சிலர் ஊசி, பாசிமணிகளை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் ஒன்றும் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் கையில் லத்தியுடன் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது, அவர் அங்கிருந்த நரிக்குறவ பெண்ணிடம் அத்துமீறியதுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை தட்டிக்கேட்க முயன்ற அந்த பெண்ணின் உறவினரான மாற்றுத்திறனாளியை, அந்த நபர் லத்தியால் தாக்க முயன்றார். இதை பார்த்த பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தட்டி கேட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறி போகவே அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து கையை பின்னால் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரித்தபோது, அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும், சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார், அவரை பத்திரமாக பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதை பார்த்த பொதுமக்கள் விரக்தி அடைந்தனர்.

இதுகுறித்து அங்கு இருந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பெண்ணிடம் அத்துமீறி தகராறில் ஈடுபட முயன்ற போலீஸ்காரரை கையும், களவுமாக பிடித்து போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்து உள்ளோம். ஆனால், அவர் மீது போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் பத்திரமாக பஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த போலீஸ்காரர் நடக்கக்கூட முடியாமல் மதுபோதையில் இருந்துள்ளார். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இப்படி பெண்களிடம் நடந்து கொண்டால் எங்கே செல்வது‘ என்றனர்.
Tags:    

Similar News