செய்திகள்
கைது

டெல்லிக்கு ரெயிலில் செல்ல முயன்ற 48 விவசாயிகள் கைது

Published On 2020-12-04 13:52 GMT   |   Update On 2020-12-04 13:52 GMT
திருச்சியில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் செல்ல முயன்ற 48 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 23-ந் தேதி திருச்சியிலிருந்து புறப்படத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்றைய தினம் போலீசார் அவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 70 விவசாயிகள் நேற்று காலை வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்று பின்னர் அங்கிருந்து டெல்லி செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில் நிலைய வாசலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

டெல்லி செல்வதற்கு அனுமதி இல்லை போலீசார் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் ரெயில் நிலையம் முன் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் அய்யாக்கண்ணு உள்பட 48 விவசாயிகளை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
Tags:    

Similar News