செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை- சென்னை ஐகோர்ட்

Published On 2020-12-01 10:56 GMT   |   Update On 2020-12-01 10:56 GMT
பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவித்துள்ளதாகக் கூறி, ராம்குமார் ஆதித்தன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அரியர் ரத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

வழக்கு விசாரணைகளை சிலர் சட்ட விரோதமாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

யூடியூப்பை வெளியிட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரியர் தேர்வு வழக்கு விசாரணை காணொலி அல்லாமல் நேரடி விசாரணையாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News