காணாமல் போன மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது உறவினர்கள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காணாமல் போன மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
பதிவு: நவம்பர் 28, 2020 05:52
மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் குஜிலியான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 40). இவரது மகள் தனலட்சுமி (16). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 20-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் மாணவியின் தாயார் அனிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மாணவியின் தாயார் அனிதா, தனது உறவினர்கள் மற்றும் மாதர்சங்கத்தினருடன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். பின்னர் புகார் குறித்து இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி போலீஸ் நிலையம் முன் அமர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.