செய்திகள்
கைது

மதுரையில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

Published On 2020-11-27 08:39 GMT   |   Update On 2020-11-27 08:39 GMT
மதுரையில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கூடல்புதூர் ராஜ்நகரைச் சேர்ந்தவர் உமாசந்திரா (வயது43). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த காதர்பாட்சா (53) என்பவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மளிகை பொருட்கள் வாங்கினார்.

அவர் கொடுத்தது கள்ள நோட்டு என்பது தெரிய வந்ததால் உஷாரான உமாசந்திரா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காதர் பாட்சாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவரிடம் மேலும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 3 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.17 ஆயிரத்து 500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் காதர் பாட்சாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

அவர் அளித்த தகவலின் பேரில் மதுரை சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணி (48), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (36), மீனாம் பாள்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (34), தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (61) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

குருமூர்த்தியிடம் இருந்து 5 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குருமூர்த்தி மீது ஏற்கனவே கள்ள நோட்டுகள் மாற்றியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் ஜெயிலில் தண்டனை அனுபவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் கள்ள நோட்டு வழக்கில் போலீசில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கள்ள நோட்டு களை கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார்.

அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஓசூர் விரைந்துள்ளனர். அவர் பிடிபட்டால்தான் தமிழகத்தில் எத்தனை இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டது என்பது தெரியவரும்.

Tags:    

Similar News