செய்திகள்
9½ டன் லாரியை கயிறு மூலம் இழுத்த இரும்பு மனிதனை படத்தில் காணலாம்.

9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்

Published On 2020-11-26 02:13 GMT   |   Update On 2020-11-26 02:13 GMT
9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்து தமிழகத்தின் இரும்பு மனிதன் உலக சாதனை படைத்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த தாமரைகுட்டிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). தமிழகத்தின் இரும்பு மனிதனான இவர் உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் 2020-ம் ஆண்டுக்கான இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடம் பிடித்து (வெண்கல பதக்கம் பெற்று) தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார்.

இந்தநிலையில் இவர் புதிய சாதனை ஒன்றை படைக்க விரும்பினார். அதாவது உலக அளவில் இருமுனை கயிறு மூலம், அதாவது ஒரு கையால் கயிற்றால் கட்டப்பட்ட கனரக வாகனத்தை இழுத்தும், மற்றொரு கையால் எதிர்முனையில் உள்ள தூணில் கட்டப்பட்ட கயிற்றை பிடித்தும் இழுப்பார்கள். ஆனால் கண்ணன் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக ஒரு முனை கயிறு மூலம் கனரக வாகனத்தை 40 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சாதனை படைக்க விரும்பினார். அதன்படி நேற்று காலை நாகர்கோவிலை அடுத்த தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எதிரே புதிய தேசிய நெடுஞ்சாலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

சோழன் உலக புத்தக சாதனை அமைப்பின் நிறுவனர் நிமலன் நீலமேகம், தேசிய தடகள வீரர்களுக்கான பயிற்றுனர் அண்ணாவி, குமரி மாவட்ட உடல்வலு சங்க செயலாளர் சரவணசுப்பையா ஆகியோர் முன்னிலையில் இந்த சாதனை முயற்சி நிகழ்ச்சி நடந்தது. அப்போது கண்ணன் 9½ டன் எடை கொண்ட லாரியை ஒருபக்க கயிறு மூலம் பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு 90 மீட்டர் தூரம் இழுத்து சாதனை படைத்தார். இது அங்கு திரண்டு நின்ற பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

உலக அளவில் குறைந்த எடை, உயரத்தை கொண்ட கண்ணன் ஒரு பக்க கயிறு மூலம் 90 மீட்டர் தூரத்துக்கு கனரக வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார் என்றும், இதுபோன்ற சாதனையை வேறு யாரும் நிகழ்த்தவில்லை என்று சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிமலன் தெரிவித்தார். பின்னர் கண்ணன் சாதனை படைத்ததற்காக உலக சாதனை சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கினார்.

இதுதொடர்பாக கண்ணன் கூறுகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற நான் 9½ டன் எடை கொண்ட லாரியை 30 முதல் 40 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சாதனை படைக்க எண்ணியிருந்தேன். ஆனால் அதை விட கூடுதலாக 90 மீட்டர் தூரத்துக்கு இழுத்து உலக சாதனை படைத்துள்ளேன். வரும் காலங்களில் உலக அளவில் இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதை எனது லட்சியமாக கொண்டுள்ளேன். அதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
Tags:    

Similar News