நிவர் புயலின் நகர்வு வேகம் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காவிட்டால் கரை கடப்பதற்கு கூடுதல் நேரம் ஆகலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேகத்தில் நகர்ந்தால் நிவர் புயல் நாளைதான் கரையை கடக்கும் -வல்லுநர்கள் கணிப்பு
பதிவு: நவம்பர் 25, 2020 15:53
நிவர் புயல் நகர்வு திசை
சென்னை:
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், இன்று அதிகாலையில் தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியது. புயலின் நகர்வு திசையை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து அதன் அடிப்படையில் முன்னறிவிப்பை வெளியிட்டு வருகிறது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 நிலவரப்படி புயல் சென்னையில் இருந்து 250 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. அதன்பின்னர் அதன் நகர்வு வேகம் மற்றும் சுழலும் வேகம் சற்று அதிகரித்தது. மணிக்கு 11 கிமீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. புயலின் வேகம் மேலும் அதிகரித்து, புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கரை கடக்கும் நிகழ்வு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
ஆனால், நீண்ட நேரமாக ஒரே வேகத்தில் புயல் நகர்வதால் கரை கடப்பது தாமதம் ஆகலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள 11 கிமீ என்ற வேகத்தில் நகர்ந்தால், கரை கடப்பதற்கு நாளை முற்பகல் வரை கூட ஆகலாம் என்கின்றனர்.
வழக்கமாக புயல்கள் மணிக்கு 10 கிமீ முதல் 20 கிமீ வேகம் வரை நகரும். ஆனால், நிவர் புயல் நேற்று 5 முதல் 6 கிமீ வேகம் வரையில்தான் நகர்ந்தது. அதன்பின்னர் சற்று அதிகரித்து இன்று 11 கிமீ வேகத்தை எட்டியிருக்கிறது. இதே வேகத்தில் நகர்ந்தால் நாளை முற்பகலில்தான் புயல் கரை கடக்கும் என வானிலை ஆய்வு மைய முன்னாள் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
Related Tags :