செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தமிழகம்-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடர்ந்து இயங்கும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2020-11-13 20:43 GMT   |   Update On 2020-11-13 20:43 GMT
பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக தமிழகம்-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடர்ந்து இயங்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 11.11.2020 முதல் 16.11.2020 வரை கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே பஸ் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முதல்-மந்திரி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கிடையே அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்தை தடையின்றி தொடர்ந்து இயக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து சேவையை தொடர பொதுமக்களிடம் இருந்தும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை கருத்தில் கொண்டு, பணி நிமித்தமாக பொதுமக்கள் சென்று வர ஏதுவாகவும், 16.11.2020-க்கு பின்னரும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவையை தொடர்ந்து இயக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பஸ் சேவையை பயன்படுத்தும் போது, அரசு வெளியிட்டுள்ள நிலையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News