செய்திகள்
சோத்துப்பாறை அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறும் காட்சியை படத்தில் காணலாம்.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பியது

Published On 2020-11-08 09:20 GMT   |   Update On 2020-11-08 09:20 GMT
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். மொத்த கொள்ளளவு 100 மில்லியன் கன அடியாகும். இந்த அணையின் மூலம் தாமரைக்குளம், பெரியகுளம், பாப்பயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பெரியகுளம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் நீர்வரத்து ஏற்படும்.

இந்தநிலையில் பெரியகுளம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அணை தனது முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. நேற்று காலை நிலவரப்படி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 90 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது.

சோத்துப்பாறை அணை நிரம்பியதை அடுத்து அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, உபரிநீர் வராகநதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு வராகநதி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News