செய்திகள்
கைது

பல்லடத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற தொழிலாளி கைது

Published On 2020-11-04 10:18 GMT   |   Update On 2020-11-04 10:18 GMT
பல்லடத்தில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்:

திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தை சேர்ந்தவர் முகமது அனிபா. இவர் பல்லடம் தினசரி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வடமாநில தொழிலாளி ஒருவர் வந்தார். பின்னர் கடையில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு 100 ரூபாய் நோட்டை கொடுத்தார். அந்த 100 ரூபாய் நோட்டை கடைக்காரர் முகமது அனிபா பெற்றுக்கொண்டார்.

அப்போது அந்த 100 ரூபாய் நோட்டு வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து வேறு நோட்டு கொடுக்கும்படி கூறினார். இதையடுத்து, அந்த வடமாநில தொழிலாளி வேறு ஒரு 100 ரூபாய் நோட்டை கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டும் அசல் ரூபாய் நோட்டுபோல் இல்லை. மேலும் அந்த இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் ஒரே எண் கொண்டதாக இருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த முகமது அனிபா, மற்றும் அருகில் இருந்த கடைக்காரர்கள் அவரை பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுசில் பிஸ்வால் (வயது 44) என்பதும், பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 19-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டுகளை யாரிடம் இருந்து வாங்கினார்? இதற்கு முன்பு இதுபோல் கள்ள நோட்டுகளை மாற்றினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News