செய்திகள்
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை காணலாம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது?

Published On 2020-11-04 09:16 GMT   |   Update On 2020-11-04 09:16 GMT
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்வது திற்பரப்பு அருவி ஆகும். இதனை குமரியின் குற்றாலம் என்றும் அழைப்பதுண்டு. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் திற்பரப்பு அருவிக்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. இதனால் 8 மாதங்களாக திற்பரப்பு அருவி சுற்றுலா பயணிகள் இன்றி களையிழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

எனவே அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளின் வியாபாரம் இல்லாமல் போனது. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

அதே சமயத்தில் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகளை செய்து அழகு படுத்தியுள்ளனர். குறிப்பாக சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் மற்றும் சுற்றுப்புறங்களை அழகுப்படுத்தி மேம்பாட்டு பணிகள் செய்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமலும் பேரூராட்சிக்கு வருமானம் ஈட்டவும் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் திற்பரப்பு அருவிக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News