செய்திகள்
அமைச்சர் துரைக்கண்ணு

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

Published On 2020-10-31 18:56 GMT   |   Update On 2020-10-31 19:01 GMT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந்தேதி இரவு சேலத்தில் மரணம் அடைந்தார். இதுகுறித்து கேள்விப்பட்டு அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காரில் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார்.
 
விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. 

திடீரென அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. இதய பாதிப்பும் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார்.
Tags:    

Similar News