செய்திகள்
கோப்புபடம்

பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவி உள்பட 2 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2020-10-29 11:18 GMT   |   Update On 2020-10-29 11:18 GMT
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவி உள்பட 2 பெண்களிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மனைவி பொன்னம்மாள் (வயது 70). இவர் நேற்று காலையில் தனது வீட்டின் முன்பு கோலமிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று பொன்னம்மாளின் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் நகையை பறித்தனர். உடனே பொன்னம்மாள் ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். ஆனாலும் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தமிழ் நகரைச் சேர்ந்தவர் மரிய இக்னேஷியஸ். இவருடைய மனைவி பிரேமா (36). இவர் நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை ரோஸ் நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று பிரேமா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

உடனே சுதாரித்து கொண்ட பிரேமா தனது நகையை கைகளால் இறுக பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அப்போது அந்த தங்க சங்கிலி இரண்டு துண்டாக அறுந்தது. அறுந்த 1¼ பவுன் நகையை பறித்து கொண்ட 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்களில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News