செய்திகள்
நீர்மட்டம் 53.05 அடியாக சரிந்த நிலையில் வைகை அணையை படத்தில் காணலாம்.

கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் சரிவு

Published On 2020-10-24 09:52 GMT   |   Update On 2020-10-24 09:52 GMT
பருவமழை தாமதமாகி வரும் நிலையில் பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நிலங்களுக்கு ஒருபோக பாசனத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.

இந்தநிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணைக்கு சராசரியாக 1,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. வடகிழக்கு பருவமழையும் இந்த ஆண்டு இதுவரை தொடங்காததால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற கலக்கம் நிலவுகிறது.

இதே நாளில் கடந்த ஆண்டு வைகை அணை நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டை விட தற்போது அணையின் நீர்மட்டம் 10 அடி குறைவாக 53.05 அடியாகவும், நீர்வரத்தும் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு வைகை அணை 3 முறை முழுக்கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைக்கொடுத்தால் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News