முதியவரை கம்பியால் தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
முதியவரை கம்பியால் தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை - மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பு
பதிவு: அக்டோபர் 24, 2020 14:34
கோப்புபடம்
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது59). விவசாயி. இவரது மகன் ராஜ முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த சதீஸ் (35) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மாரியம்மன் கோவில் அருகே ராஜமுருகனை, சதீஸ் வழிமறித்து தகராறு செய்தார். அப்போது கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த நாராயணன் சதீசை தனது மகனிடம் ஏன் தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஸ் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் நாராயணனை தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தலையாமங்கலம் போலீசில் நாராயணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு மன்னார்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி குபேரசுந்தர், நாராயணனை தாக்கிய சதீஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.