செய்திகள்
குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

இடுவம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-10-19 14:34 GMT   |   Update On 2020-10-19 14:34 GMT
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீரபாண்டி:

திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு 20 நாட்களுக்கும் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

எனவே குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முருகம்பாளையம், ஆண்டிபாளையம், ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையோரம் நிறுத்தப்பட்டன.

இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக இடுவம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News