செய்திகள்
தஞ்சையில் உள்ள ஒரு இறைச்சி கடையில் நேற்று இறைச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.

தஞ்சையில் இறைச்சி வாங்க ஆர்வத்துடன் குவிந்த மக்கள்

Published On 2020-10-19 07:47 GMT   |   Update On 2020-10-19 07:47 GMT
ஐப்பசி மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தஞ்சையில் இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். புரட்டாசி மாதத்தை விரத மாதம் என அழைப்பார்கள். பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால் அந்த மாதத்தில் அசைவ உணவுகளின் விற்பனை குறைவாக தான் இருக்கும். புரட்டாசி மாதம் முடிவடைந்து ஐப்பசி மாதம் தொடங்கிவிட்டது. புரட்டாசியில் விரதம் இருந்தவர்கள் மீண்டும் அசைவ உணவுகளை நாடி வருகின்றனர். ஐப்பசி மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தஞ்சை கீழவாசலில் உள்ள கோழிக்கறி கடைகள், ஆட்டுஇறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் எல்லா பகுதிகளிலும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிமாக இருந்தது.

தஞ்சை கீழவாசலில் உள்ள மீன்மார்க்கெட்டில் மீன்கள் வாங்குவதற்காக மக்கள் அதிகஅளவில் வந்து இருந்தனர். ஏற்கனவே புயல் சின்னம் காரணமாக மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன்களின் விலையும் அதிகமாக இருந்தது. நண்டு விலை இருமடங்கு உயர்ந்தது. சங்கரா, கிளங்கா, கெண்டை, விரால், ராட்டு உள்ளிட்ட அனைத்து மீன்களும் ரூ.30 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்து காணப்பட்டது.

மேலும் தஞ்சை நகரில் ஆங்காங்கே மினி லாரிகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்காலிக கடைகளும் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன. இங்கெல்லாம் கூட்டம் அதிகமாக தான் இருந்தது.
Tags:    

Similar News