செய்திகள்
கைது

பக்கத்து வீட்டில் குடியிருந்த பெண்ணிடம் 13 பவுன் நகை - ரூ.50 ஆயிரம் மோசடி - நிதி நிறுவன ஊழியர் கைது

Published On 2020-10-10 18:25 GMT   |   Update On 2020-10-10 18:25 GMT
பக்கத்து வீட்டில் குடியிருந்த பெண்ணிடம் 13 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மோசடி செய்ததாக நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் தெற்கு அரியாவூர் அருகே உள்ள உக்கடையை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மனைவி அமுதா (வயது 42). இவர், இதற்கு முன்பு திருச்சி உறையூர் லிங்கநகர் அருகே உள்ள கதிரேசன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். உறையூரில் அமுதா வசித்தபோது, அவரது பக்கத்து வீட்டில் ஆனந்த் (37) என்பவர் வசித்து வந்தார்.

இவர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்தார். பக்கத்து வீட்டில் இருப்பவர் என்பதால் அமுதா சகஜமாக பேசுவது வழக்கம். அதன் அடிப்படையில் வீட்டு உரிமையாளருக்கு வாடகை முன்பணமாக கொடுக்க வேண்டிய ரூ.50 ஆயிரத்தை ஆனந்துக்கு அமுதா கொடுத்தார்.

மேலும் அவசர தேவைக்காக அமுதாவிடம் ஆனந்த் பணம் கேட்டுள்ளார். உடனே அவர், தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி, தான் வைத்திருந்த 13 பவுன் தங்கநகையை கொடுத்து அடகு வைக்க சொன்னார். குறிப்பிட்ட மாதங்கள் ஆகியும் தங்கநகையை ஆனந்த் திரும்ப கொடுக்கவில்லை. இந்தநிலையில்தான் அமுதா, உறையூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு உக்கடைக்கு குடிபெயர்ந்தார். வீட்டை காலி செய்யும் முன்பு கடந்த 5-ந்தேதி, வீட்டுக்காக முன்பணமாக கொடுத்த ரூ.50 ஆயிரம் மற்றும் 13 பவுன் தங்கநகையை மீட்டுத்தருமாறு அமுதா கேட்டார். அப்போதுதான், நகையை ஆனந்த் அவரது பெயருக்கு வங்கியில் அடகு வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் நகையை அடகு வைத்து மீட்டர் வட்டிக்கு கொடுத்ததும், ரூ.50 ஆயிரம் பணத்தையும் வட்டிக்கு கொடுத்துவிட்டு திரும்ப கொடுக்காமல் அமுதாவை ஏமாற்றி மோசடி செய்ததும் தெரிந்தது. அத்துடன் நகை, பணத்தை திரும்ப கேட்ட அமுதாவை அவதூறாக பேசி மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உறையூர் போலீசில் அமுதா புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிராஜ் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News