செய்திகள்
கோப்புபடம்

நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் - ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Published On 2020-10-01 14:49 GMT   |   Update On 2020-10-01 14:49 GMT
விவசாயிகள் பயன் அடையும் வகையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்:

தஞ்சை பனகல் கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் வெங்கடாஜலபதி வரவேற்றார்.

கூட்டத்தில் ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

விஜயலட்சுமி சாம்பசிவம்(அ.தி.மு.க): விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வணிக ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த சாகுபடி சட்டம் ஆகிய 3 வேளாண் சட்ட மசோதாக்களை மத்தியஅரசு நிறைவேற்றியுள்ளது. அதற்கு தமிழகஅரசு ஆதரவு அளித்துள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.

உதயணன்(தி.மு.க): நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையும் பெய்வதால் நெல் நனைகிறது. விவசாயிகள் முழு பயனையும் அடையும் வகையில் நெல் கொள்முதலை தொடங்க வேண்டும்.

அதிகாரி: நாளை(அதாவது இன்று) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படும்.

பரிமளம்(தி.மு.க): கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல் உடல் வெப்பநிலையை கண்டறியும் பரிசோதனையை செய்தால் நன்றாக இருக்கும்.

முத்துச்செல்வன்(துணை தலைவர்): பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பல வார்டுகளில் பணிகள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் பணி முடிக்கப்படவில்லை. மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

உஷா புண்ணியமூர்த்தி(தலைவர்): கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி கேட்க ஆசைப்பட்டால் அந்த கேள்விகளை 10 நாட்களுக்கு முன்பே எனக்கு தெரிவிக்க வேண்டும். அவற்றில் எது தேவை, தேவையில்லை என முடிவு செய்து பதில் சொல்வேன்.

வெங்கடாஜலபதி(செயலாளர்): வரையறுக்கப்படாத நிதியாக முதல்கட்டமாக ரூ.1 கோடியே 76 லட்சம் வந்து இருக்கிறது. இந்த நிதி மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மொத்தமாக ஓரிடத்தில் அமர்ந்து ஓய்வு எடுப்பதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ராஜா(தி.மு.க): பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருவாரூரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கிறதா? என ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு உறுப்பினர்கள் பேசினர்.

Tags:    

Similar News