செய்திகள்
கைது

சார்பதிவாளர் குடும்பத்தினரை காரை ஏற்றி கொல்ல முயற்சி- வக்கீல் கைது

Published On 2020-10-01 10:30 GMT   |   Update On 2020-10-01 10:30 GMT
ஆண்டிப்பட்டியில் பத்திரப்பதிவு முன்விரோதத்தில் சார்பதிவாளர் குடும்பத்தினரை காரை ஏற்றி கொல்ல முயன்ற வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 35). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷாராணி. இவர் ஆண்டிப்பட்டியில் சார்பதிவாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த வக்கீல் கணேசன் (45) சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு சார்பதிவாளர் உஷாராணியிடம் தனக்கு சாதகமான பத்திரத்தை பதிவு செய்து தரும்படி கேட்டார். இதற்கு சார்பதிவாளர் உஷாராணி சட்டப்படிதான் பத்திரம் பதிவு செய்வேன் என்று கூறினார். உடனே கணேசன் அங்கிருந்து சென்று விட்டார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக உஷராணியின் கணவர் தினேசை வக்கீல் கணேசன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் தினேஷ் மற்றும் அவருடைய அக்கா மகன்கள் நிதிஷ்குமார் மற்றும் கவியரசன் ஆகிய மூவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் காரில் வேகமாக வந்த வக்கீல் கணேசன், தினேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். முன்விரோதம் காரணமாக தன்னையும், தனது குடும்பத்தினரையும் கார் மோதி கொலை செய்ய முயன்றதாக கணேசன் மீது ஆண்டிப்பட்டி போலீசில் தினேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News