செய்திகள்
மீட்பு

பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறிய 5 மாணவர்கள் நாகர்கோவிலில் மீட்பு

Published On 2020-10-01 06:12 GMT   |   Update On 2020-10-01 06:12 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த 5 பள்ளி மாணவர்கள், பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறினர். நாகர்கோவிலில் இருந்த அவர்களை போலீசார் மீட்டனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த 5 மாணவர்கள் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசிப்பதால், நண்பர்கள் ஆகினர். தினமும் பள்ளிக்கு சென்று திரும்பியதும், ஒன்றாகவே விளையாடுவார்கள். இதற்கிடையே கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் அடிக்கடி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விளையாட சென்ற 5 பேரும் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர், திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் மாயமான மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில், மாயமான 5 பேரில் ஒரு மாணவன் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த செல்போன் நாகர்கோவிலில் செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்று, மாயமான 5 பேரையும் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெற்றோர் திட்டிய நிலையில், பள்ளிகள் திறக்காததால் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக திண்டுக்கல் பஸ்நிலையத்துக்கு வந்தபோது, திருப்பூருக்கு பஸ் கிடைக்கவில்லை. அப்போது ஒரு மாணவனின் உறவினர் நாகர்கோவிலில் வசிப்பது நினைவுக்கு வந்ததால், 5 பேரும் அங்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும், பெற்றோரிடம் ஒப்படைக்க திண்டுக்கல்லுக்கு போலீசார் அழைத்து வருகின்றனர்.
Tags:    

Similar News