செய்திகள்
கோப்புபடம்

அண்ணா மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2020-09-25 14:23 GMT   |   Update On 2020-09-25 14:23 GMT
கோவை அண்ணா மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா தினசரி மார்க்கெட் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் கோவையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக இந்த மைதானம் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

இதனைத்தொடர்ந்து அண்ணா தினசரி மார்க்கெட் கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் மழை காரணமாக இந்த மைதானமும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே வியாபாரிகள் மீண்டும் அண்ணா மார்க்கெட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக மார்க்கெட்டை மீண்டும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று ஏராளமான வியாபாரிகள் அண்ணா மார்க்கெட் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

தினசரி மார்க்கெட் நடைபெற்று வரும் அரசு தொழில்நுட்பக்கல்லூரி மைதானம் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்யும் போது வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். மேலும் காய்கறிகளும் மழையில் நனைந்து வீணாகிறது. பொதுமக்கள் சில நேரங்களில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே வியாபாரிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா தினசரி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் உரிய சமூக இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா மார்க்கெட்டில் உள்ள மாநகராட்சி கழிப்பறை பல நேரங்களில் பூட்டியே காணப்படுகிறது. இதனால் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள், சாய்பாபா காலனி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News