செய்திகள்
ஏடிஎம் கொள்ளை முயற்சி

சேலத்தில் ஏடிஎம் வயர்களை துண்டித்து கொள்ளையடிக்க முயற்சி- பல லட்சம் ரூபாய் தப்பியது

Published On 2020-09-20 06:51 GMT   |   Update On 2020-09-20 06:51 GMT
சேலத்தில் ஏடிஎம் வயர்களை துண்டித்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்:

சேலம் அழகுசமுத்திரம் பகுதியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் கிளை ஒன்று இரும்பாலை பகுதியில் இயங்கி வருகிறது. இதன் அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. தினமும் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு வந்து பணம் எடுத்து செல்வது வழக்கம். இதனால் எப்போதும் இந்த மையம் பரபரப்பாகவே இருக்கும்.

இந்த நிலையில் மர்ம நபர்கள், ஏ.டி.எம்.-ல் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக நேற்று இரவு அந்த பகுதிக்கு வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவர்கள் நைசாக மையத்துக்குள் புகுந்து, ஏ.டி.எம்.-ல் இருந்த கேபிள் வயர்களை துண்டித்தனர். இதனால் அலாரம் ஒலித்தது. மேலும், அலார்ட் அலாரம் மங்களபுரத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட வங்கி ஊழியருக்கு சென்றது.

உடனே, ஊழியர் சுதாரித்துக்கொண்டு சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். நுண்ணறிவு பிரிவு போலீசார், வாக்கிடாக்கி மூலம் தொடர்பு கொண்டு இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார், ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. கேபிள் வயர்கள் மட்டும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் வருவதை தெரிந்துகொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் கைவரிசை காட்ட முயன்ற கும்பல் உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா? என கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று காலையில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஏ.டி.எம்.மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா மற்றும் வங்கி முன்பு உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என கணினியில் உள்ள வீடியோவை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தக்க நேரத்தில் போலீசார் அங்கு வந்ததால் ஏ.டி.எம்-ல் இருந்த பல லட்ச ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News