search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM robbery try"

    திண்டுக்கல்லில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வேடப்பட்டியில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இது குறித்து நகர் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரித்ததில் 2 பேரும் ஏ.டி.எம். மையம் மற்றும் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் என்பது தெரிய வந்தது.

    அந்த வாலிபர்கள் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 20), வேடப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியதீபக் (17) என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து வேறு ஏதும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிகொண்டா அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் தெருவில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தார். ஏ.டி.எம். மையம் அருகே போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனையடுத்து போலீசார், வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் நந்தா என்கிற முத்துக்குமார் (வயது 22) என்பதும், செங்கல்சூளை வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.

    வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டி தெருவில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அப்பகுதியில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. மையத்தின் முன்பக்க கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டும் உள்ளே இருந்த கேமரா திருப்பி வைக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், 4 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து கேமராவை உடைப்பது தெரிந்தது. அவர்கள் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். ஆனால் பணம் இருந்த பகுதியை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீஞ்சூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் மணலி சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.

    நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வயரை துண்டித்தனர்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறையால் உடைக்க முயன்றனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இன்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாடிக்கையாளர்கள் எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மாலை தான் ஊழியர்கள் பணம் நிரப்பி சென்று இருக்கிறார்கள். கொள்ளையர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.

    கண்காணிப்பு கேமிராவின் வயரை துண்டிப்பதற்கு முன்பு மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கடந்த ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. அடுத்தடுத்து ஏ.டி.எம். மையத்தை மர்மகும்பல் குறி வைப்பது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×