செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகள் உதவி திட்டத்தில் மோசடி: குமரி கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு

Published On 2020-09-07 14:30 GMT   |   Update On 2020-09-07 14:30 GMT
விவசாயிகள் உதவி திட்டத்தில் மோசடி நடந்திருப்பதை விசாரிக்க வேண்டும் என குமரி கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு அளித்தனர்.

நாகர்கோவில்:

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் இதில் விவசாயிகள் இல்லாதோரும் சேர்க்கப்பட்டு மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், வேலூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் உதவி திட்டத்தில் பெரிய அளவில் பண மோசடி நடந்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் சிக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் விவசாயிகள் உதவி திட்டத்தில் மோசடி நடந்திருப்பதை விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணை குழு ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கண்காணிப்பை விரிவுப்படுத்தி உண்மையாக விவசாயிகளுக்கு மட்டும் உதவி தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு கொடுக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமியிடம், தேசிய செயற்குழு உறுப்பினர் காளிதாஸ் தலைமையில் பா.ஜனதாவினர் மனு அளித்தனர். அதில், “சென்னை மாவட்டத்தில் விவசாயிகள் உதவி திட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் இருந்தால் கடுமையான தண்டனை கிடைக்க ஆவண செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

அப்போது விவசாய அணி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணகுமார், விஜய் ஆனந்த், சைதை சந்துரு, சாய்சத்யன், விவசாய அணி மாவட்ட தலைவர்கள் உடன் வந்து இருந்தனர்.

இதே போல் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா விவசாய அணி மாவட்ட தலைவர் சிவகுமார், பாரதிய ஜனதா மாநில செயலாளர் உமா ரதிராஜன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News