செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - கோவையில் இடிந்து விபத்த வீடு

கோவையில் வீடு இடிந்து விபத்து- முதலமைச்சர் நிதியுதவி

Published On 2020-09-07 08:22 GMT   |   Update On 2020-09-07 08:22 GMT
கோவையில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:

கோவையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு 10 மணியளவில் கண்ணன் என்பவரின் 2 மாடி வீடு பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்து தரை மட்டமானது. அப்போது வீட்டில் இருந்த கண்ணன், அவரது தாய் வனஜா, மனைவி சுவேதா, மகன் தன்வீர், சகோதரி கவிதா உள்பட 7 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட கண்ணன், அவரது தாய் வனஜா, மகன் தன்வீர், சகோதரி கவிதா, உறவினர்கள் உள்பட 6 பேரை உயிருடன் மீட்டனர்.

தொடர் போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் சுவேதாவும், பக்கத்து வீட்டை சேர்ந்த கோபால்சாமி என்பவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சுவேதா, கோபால்சாமி ஆகியோர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News