செய்திகள்
கோப்பு படம்.

கோவையில் இளம்பெண்ணை தாக்கி காரில் கடத்தல்?

Published On 2020-09-05 13:07 GMT   |   Update On 2020-09-05 13:07 GMT
கோவையில் இளம்பெண்ணை மர்ம நபர் தாக்கி காரில் கடத்தப்பட்டது குறித்து வாலிபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை:

கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு ஒரு வாலிபர் பேசினார். அதில் கோவை சித்தாபுதூர் சின்னசாமி ரோட்டில் ஒரு இளம்பெண்ணை தாக்கிய மர்ம நபர் காரில் அவரை கடத்திச்சென்றார் என்று கூறியதுடன் கார் எண்ணையும் தெரிவித்தார்.

இதனையடுத்து உஷாரான போலீசார் சித்தா புதூர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். வாலிபர் கொடுத்த கார் எண்ணை வைத்து போலீசார் தேடினர். அந்த கார் சாய்பாபா காலனியை சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சாய்பாபா காலனிக்கு சென்று குறிப்பிட்ட முகவரியில் விசாரணை நடத்தினர்.

அப்போது கார் உரிமையாளர் கூறும்போது, நானும் எனது மனைவியும் இரவு சித்தாபுதூர் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றோம். சாப்பாடு வாங்கியபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் எனது மனைவி என்னை தாக்கினார். பதிலுக்கு நான் அவரை தாக்கினேன். வலியை நான் தாங்கிக்கொண்டேன். எனது மனைவி வலி தாங்கமுடியாமல் அலறி ஆர்ப்பாட்டம் செய்து விட்டார்.

இதனை பார்த்த அந்த வழியே சென்ற வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை கடத்திச்சென்று விட்டதாக நினைத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விட்டார். நாங்கள் இருவரும் இப்போது சமாதானம் அடைந்து விட்டோம் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.

தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் கூறியது உண்மை என்று தெரியவந்தது. பொது இடங்களில் இனி இப்படி நடக்ககூடாது என்று எச்சரித்துவிட்டு போலீசார் திரும்பினர்.

Tags:    

Similar News