செய்திகள்
கலெக்டர் சிவன் அருள்

10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்- கலெக்டர் பேச்சு

Published On 2020-08-30 09:08 GMT   |   Update On 2020-08-30 09:08 GMT
10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் கூறியுள்ளார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிதிசார் கல்வி மையம் சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிதியியல் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமேகலை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு பேசுகையில் வருங்காலங்களில் அனைத்தும் கணினி மயமாக்கப்படும். அனைவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பல விதங்களில் சேமிக்க வேண்டும். அதே போல வங்கியில் கடன் வாங்கும்போது தங்களுடைய வருமானத்திற்கு உட்பட்டு கடனை திருப்பி கட்ட முடிந்த அளவுக்கு வாங்கவேண்டும்.

10 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். ஒருங்கிணைந்த மனித வள மேம்பாட்டு நிதி மேலாண்மை திட்டம் மூலம் தற்போது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. இணையதள சேவை குறைபாடு காரணமாக 80 சதவீதம் பேருக்கு தான் இந்த மாதம் சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் சென்னை ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர் கே.தாமோதரன், நிதிசார் கல்வி ஆலோசனை மைய நிதி ஆலோசகர் ஜெயராம், பள்ளிக்கல்வி ஆய்வாளர் தாமோதரன், திருப்பத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.ஜெகநாதன், வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலர் முனிமாதன் உள்பட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News