செய்திகள்
கோப்புபடம்

வீட்டை விட்டு வெளியேறி திருமணம் - காதலனை தாக்கி இளம்பெண்ணை இழுத்து சென்ற உறவினர்கள்

Published On 2020-08-28 14:04 GMT   |   Update On 2020-08-28 14:04 GMT
திருப்பத்தூர் அருகே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த காதலனை தாக்கி இளம்பெண்ணை இழுத்து சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன் (வயது30). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவரும் ஏலகிரிமலையில் உள்ள மஞ்சுக்கொல்லை புதூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி (24) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இதையறிந்த நந்தினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நந்தினிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்தனர்.

இதையறிந்த காதல் ஜோடி கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர். பின்னர் கடந்த 21-ந் தேதி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த நந்தினியின் தாய் மற்றும் உறவினர்கள் 10 பேர் கோவைக்கு சென்று நந்தினியிடம் சொந்த ஊருக்கு சென்று முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தடபுடலாக செய்து வைப்பதாகவும் கூறினர். இதை நம்பிய காதல் ஜோடி அவர்களுடன் காரில் திருப்பத்தூருக்கு புறப்பட்டனர்.

கோவையில் இருந்து சேலம் வந்தபோது அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடலாம் என கூறினர். அப்போது அச்சுதன் கீழே இறங்கியதும், மற்றொரு காரில் வந்த நந்தினியின் உறவினர்கள் அச்சுதனை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுத்த நந்தினியும் தாக்கப்பட்டார்.

பின்னர் நந்தினியை மட்டும் காரில் அழைத்துக்கொண்டு அவரது உறவினர்கள் ஏலகிரிமலைக்கு விரைந்தனர். நடுரோட்டில் தவித்த அச்சுதன் வேறொரு கார் மூலம் நேற்று திருப்பத்தூருக்கு வந்தார்.

அவர் திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று எஸ்.பி. விஜயகுமாரிடம் நடந்த வி‌ஷயங்களை கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கடத்தி செல்லப்பட்ட காதல் மனைவி நந்தினியை மீட்டு தர வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்ற எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ஏலகிரிமலை மஞ்சுக்கொல்லை புதூர் பகுதிக்கு சென்று அங்கு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த நந்தினியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

பின்னர் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர். அப்போது நந்தினியிடம் விசாரணை நடத்தியபோது, தான் காதல் கணவர் அச்சுதனுடன் செல்ல விரும்புவதாக கூறினார்.

இருவரும் மேஜர் என்பதால், அவர்களை பிரிப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே காதல் தம்பதியை பிரித்தாலோ, மிரட்டினாலோ, ஏதேனும் தொந்தரவு கொடுப்பதோ தெரியவந்தால் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்து நந்தினி விருப்பப்படி அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News