செய்திகள்
நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள்

ஓணம் பண்டிகையையொட்டி குமரியில் வாழைத்தார் விற்பனை களைகட்டியது

Published On 2020-08-28 10:25 GMT   |   Update On 2020-08-28 10:25 GMT
ஓணம் பண்டிகையையொட்டி குமரியில் வாழைத்தார் விற்பனை களை கட்டியது.
நாகர்கோவில்:

கேரளாவில் ஓணம் பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அண்டை மாவட்டமான குமரியிலும் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஓணம் கொண்டாட்டம் எளிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் மலர் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதே போல வாழைத்தார் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகைக்காக குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வாழைத்தார்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். முக்கியமாக நாகர்கோவில் அப்டா மார்க்கெட், திங்கள்சந்தை ஆகிய இடங்களில் இருந்து வாழைத்தார்கள் ஏற்றுமதி அதிகமாக இருக்கும்.

பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் அப்டா மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் வாழைத்தார் மற்றும் காய்கறிகள் வாங்க கேரள வியாபாரிகள் ஏராளமானோர் குமரிக்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கேரள வியாபாரிகளால் வரமுடியவில்லை. அதற்கு பதிலாக இங்குள்ள புரோக்கர்கள் மூலமாக வாழைத்தார்களை ஏலம் எடுத்தனர்.

ஏலத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆற்றூர், கருங்குளம் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வாழைத்தார்கள் வண்டி வண்டியாக அப்டா மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் ஏலம் நடந்தது. ஏலத்தில் ரசகதலி மற்றும் பேயன் ஆகிய வாழைத்தார்கள் விலை குறைவாக ஏலம் போனது. அதாவது வழக்கமான நாட்களில் ரூ.400 வரை விலை போகும் ஒரு ரசகதலி வாழைத்தார் நேற்றைய ஏலத்தில் ரூ.250 முதல் ரூ.300 வரை மட்டுமே ஏலம் போனது.

இதுபோன்று ரூ.200 முதல் ரூ.250 வரை ஏலம் போகும் பேயன் வாழைத்தார் ரூ.100 முதல் ரூ.150 வரை ஏலம் போனது. அதே சமயம் பாளையங்கோட்டை மற்றும் துளுவன் ஆகிய வாழைத்தார்கள் அதிக விலை போனது. அதாவது வழக்கமான நாட்களில் ரூ.200-க்கு விற்பனையாகும் ஒரு பாளையங்கோட்டை வாழைத்தார் ரூ.250 முதல் ரூ.300 வரை ஏலம் எடுக்கப்பட்டது. ரூ.300 முதல் ரூ.350 வரை ஏலம் போகும் துளுவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கு ஏலம் போனது. இதுபோக மட்டி, கற்பூரவள்ளி, சிகப்பு, பச்சை மற்றும் ஏத்தன் உள்ளிட்ட வாழைத்தார்கள் எப்போதும் போல நல்ல விலை போனது.

ரசகதலி மற்றும் பேயன் வாழைத்தார்கள் விலை குறைவு பற்றி வியாபாரிகளிடம் கேட்டபோது, “ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் வாழைத்தார்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அதிலும் ரசகதலி, பேயன் வாழைத்தார்கள் அதிகமாக வந்தன. இதன் காரணமாக அவற்றின் விலை குறைந்தது. இதுபோக பாளையங்கோட்டை மற்றும் துளுவன் ஆகிய வாழைத்தார்கள் நல்ல விலை போனதால் அவை வந்தவுடன் விற்பனை ஆகிவிட்டது“ என்றனர்.
Tags:    

Similar News