செய்திகள்
கோப்பு படம்.

விஜயகாந்தை பார்க்க சென்ற தே.மு.தி.க. தொண்டர் ரகளை

Published On 2020-08-28 09:11 GMT   |   Update On 2020-08-28 09:11 GMT
சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு விஜயகாந்தை பார்க்க சென்ற தே.மு.தி.க. தொண்டர், சந்திக்க முடியாததால் அவரது கார் கண்ணாடியை உடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போரூர்:

சென்னை, சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வீடு உள்ளது. நேற்று இரவு 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென விஜயகாந்தின் வீட்டின் கதவு கேட்டை தட்டினார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் அங்கிருந்து செல்ல மறுத்து ரகளையில் ஈடுபட்டார். மேலும், ‘என் தலைவர் விஜயகாந்த்தை உடனே பார்க்க வேண்டும்’ என்று கூறி கூச்சலிட்டார்.

திடீரென அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு சொந்தமான காரின் முன்பக்க கண்ணாடியை கையால் ஓங்கி அடித்தார். இதில் கார் கண்ணாடி உடைந்தது.

இதனை தடுக்க முயன்ற போலீசாரையும் அந்த வாலிபர் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர், துரைப்பாக்கம் கணேஷ் நகரைச் சேர்ந்த தே.மு.தி.க. தீவிர தொண்டரான வெற்றிவேல் (37) என்பது தெரிந்தது.

அவர் தனது மார்பில் ‘கேப்டன்’ என்றும் பச்சை குத்தி உள்ளார். விஜயகாந்தை பார்க்கும் ஆர்வத்தில் அவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக விஜயகாந்த் தரப்பில் போலீசில் புகார் செய்யப்படவில்லை.

Tags:    

Similar News