செய்திகள்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு

Published On 2020-08-26 11:33 GMT   |   Update On 2020-08-26 11:37 GMT
பண மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை:

2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அதன்பின், இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. 
Tags:    

Similar News