செய்திகள்
போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Published On 2020-08-26 08:55 GMT   |   Update On 2020-08-26 08:55 GMT
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மருத்துவ முதலுதவி பெட்டி வைக்க வேண்டும். காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணிநேரம் கடையை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் 105 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 52 கடைகள் மூடப்படுவதாக இருந்தது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணியாற்றிய கடைகளுக்கு மாற்று ஆட்களை உடனடியாக நியமித்து கடைகள் திறக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே நடுக்கடையில் டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற் சங்கக்கூட்டமைப்பினர் கடையை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலர் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச.வை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் சச்சிதானந்தம், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News