செய்திகள்
அமைச்சர் பாண்டியராஜன்

7 இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடியும்- அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2020-08-25 02:54 GMT   |   Update On 2020-08-25 02:54 GMT
தமிழகத்தில் 7 இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் மாதத்தில் முடியும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் குறித்து தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை என 7 இடங்களில் அகழாய்வு நடக்கிறது. இவை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் இதற்கான அதிக ஊக்கத்தை அளித்துள்ளார். 7 இடங்களில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு வரும் செப்டம்பரில் நிறைவு பெறும்.

தமிழகத்தில் இந்திய தொல்லியல் துறை 160 இடங்களிலும், தமிழக தொல்லியல் துறை 76 இடங்களிலும் அகழாய்வுகளை நடத்தியுள்ளது. இரண்டு கள ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் தொல்லியல் சார்ந்த இடங்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. 7 விதமான தொழில் நுட்பங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

அகழாய்வுகள் நடைபெறும் 7 இடங்களில் 3,599 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். கீழடி ஆய்வில், வாழ்விடங்கள், ஈமக்காடுகள், தொழில்கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக க, ய என்ற தமிழி(தமிழ்-பிராமி) எழுத்துகள் செவ்வண்ண பூச்சு பெற்ற மண்பாண்ட ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சூது பவளம், மணிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண்ணால் ஆன முத்திரை, எடை கற்கள், அலுமினியம் கலந்த செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அகரத்தில் நுண்கற்காலத்தை சேர்ந்த மெல் அலகு கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறிய கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தங்க நாணயங்கள், சீன மண்பாண்டத்தின் விளிம்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மேற்கூரை ஓடுகள், கிண்ணங்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் காசுகள், கல்பந்துகள், சுடுமணல் ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

கற்களால் ஆன ஆயுதங்கள் கிடைத்து உள்ளதை பார்க்கும் போது, தமிழனின் வரலாறு 3 லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக் கும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News