செய்திகள்
அமைச்சர் தங்கமணி

இந்த ஆண்டு 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் அமைச்சர் தங்கமணி

Published On 2020-08-21 10:35 GMT   |   Update On 2020-08-21 10:35 GMT
தட்கல் முறையில் விண்ணப்பித்த 50 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு மின் இணைப்பு கொடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்:

நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் மழை பெய்ததால் மின் கம்பங்கள், கோபுரங்கள் பழுது அடைந்தன. இதனை சரி செய்ய இயக்குனர் அளவில் அதிகாரிகளை அனுப்பி முழுமையாக சீரமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மின்வாரியத்தில் கேங்மேன் பணி இடங்களை பொறுத்தவரையில் ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. தட்கல் மின் இணைப்பில் ஏற்கனவே விண்ணப்பித்த 40 ஆயிரம் பேருக்கும், தற்போது விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சரின் ஆலோசனைபடி இந்த ஆண்டு மின்இணைப்பு வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று இறப்பு விகிதத்தை குறைப்பது சம்பந்தமாக தான், முதல்-அமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு கூட்டம் நடத்தி வசதிகள் மற்றும் தேவைகளை கேட்டு வருகிறார். பொதுமக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து செய்ய அரசு தயாராக உள்ளது. தொழிற்சாலைகளில் 20 சதவீதம் மின் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களை 2003-ம் ஆண்டு பணியில் அமர்த்தும் போது, பணி நிரந்தரம் இல்லை எனக் கூறி தான் பணியில் அமர்த்தினோம். தற்போது நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். அதனை ஏற்று அடுத்தவாரம் மேலாண்மை இயக்குனர் அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதற்கு பிறகு நானும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News